welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Saturday, 31 December 2011

பாடத் திட்டத்தில் தமிழ் எண்கள் சேர்க்கப்படுமா?



         தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓடும் அனைத்து ரக வாகனங்களிலும் தமிழ் எண் பலகை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், எண்களை அனைவரும் அறியும் வகையில் தமிழ் எண்களைப் பள்ளி பாடத்திட்டத்தில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும். 


         தமிழ்ச் செம்மொழியை பாடத்திட்டத்தில் சேர்க்க நினைக்கும் தமிழக அரசு, தமிழ் எண்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள பல மாநில மொழி நூல்களின் பக்கங்கள், அம்மொழியிலான எண்களிலேயே உள்ளது.


         ஆனால் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் தமிழ்ப் பாடநூலின் பக்கங்களில்கூட தமிழ் எண்கள் இல்லை. தமிழறிஞர்கள் தவிர தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழ் எண்கள் தெரியாத நிலையே உள்ளது. இதற்குக் காரணம் தமிழ் எண்கள் எந்தப் பாடத்திட்டத்திலும் இல்லை.


         இருப்பினும் இந்திய வாகனச் சட்டம் 1989-ல் மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம் என்று கூறுகிறது. தமிழ்ப் பற்றாளர்கள் சிலர் வாகனச் சட்டத்தை மேற்கோள் காட்டி வாகன எண் பலகை தமிழில் தான் எழுத வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஒரு எண் பலகையை மாநில மொழியிலும், மற்றொரு எண் பலகையை ஆங்கிலத்திலும் எழுதிக் கொள்ளலாம்.


          மாநில மொழியில் எழுதலாம் என்று சட்டமே சொல்லும்போது, ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்று கூறுபவர்கள் தாய்மொழிப் பற்று இல்லாதவர்கள் என்று தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. வாகனங்களுக்கு இலவசமாகத் தமிழிலும் எண் பலகை எழுதித் தருகின்றன. சட்டம் இருக்கிறது என்று கூறி தமிழ் எண் பலகைகளை தங்கள் வாகனங்களில் பயன்படுத்தும் தமிழ்ப் பற்றாளர்கள், தமிழ் எண்களை எழுதுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.


           வாகனங்களில் எண் பலகை ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு மாநிலத்திலிருந்து, எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அங்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமேயானால், வாகன எண்ணைக் குறிக்க வசதியாக இருக்கும். மாநில மொழிகளில் எழுதினால் வேறு மாநிலத்தவர் படிப்பது சிரமமாக இருக்கும். குற்றங்களோ, விபத்துகளோ ஏற்பட்டால் அவற்றைக் கண்டுபிடிப்பது சிரமம்.


             அதனால் நாடு முழுவதும் மாநில மொழிகளில் வாகனங்களுக்கான எண் பலகை எழுதுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் எழுத வேண்டும். ஒரு எண் பலகையை மாநில மொழியில் எழுதலாம் என்ற சட்டம் இருந்தாலும், தமிழ் எண்கள் எந்தப் பள்ளியில் கற்றுத் தரப்படுகிறது? எந்தப் பள்ளியிலும் கற்றுத் தராதபட்சத்தில் அதை யாரால் படிக்க முடியும்? மற்ற மாநில மொழிகளில் உள்ள எண்கள், அங்குள்ள பள்ளியில் கற்றுத் தரப்படுகிறது. 


             தமிழகத்தில் அவ்வாறு இல்லை. இந்தத் தமிழ் எண்களைப் பற்றி போக்குவரத்துக் காவல்துறையினருக்கே தெரியாது. குற்றங்களில் ஈடுபடும் வாகனங்களின் எண்களை அவர்கள் எப்படிக் குறிக்க முடியும். ஏற்கெனவே போக்குவரத்துக் காவலர்கள் விதவிதமான ஆங்கில எழுத்துருக்களால், வாகன எண்களைக் குறிக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.


               தமிழ் அறிஞர்கள் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் தமிழ் எண்களைக் குறிப்பதற்காக, தமிழ் அறிஞர்களைத் தேடிப் பிடித்து போக்குவரத்துக் காவலர்களாக நியமிக்க முடியாது என்று பொதுநல நோக்கர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


            தமிழ் அமைப்புகள் தமிழில் எண் பலகை வேண்டும் என்று வலியுறுத்தும் எண்ணமும், அவர்களின் தாய்மொழிப் பற்றும் போற்றுதலுக்குரியது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழில் எண் பலகை வேண்டும் என்று போராடும் தமிழ் அமைப்புகளை, அந்த எழுத்துகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.


             இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு, தமிழை முதல் மொழியாகக் கொண்டு ஆளும் மாநிலங்கள், தங்கள் பள்ளிப் பாடத் திட்டத்தில் தமிழ் எண்களைச் சேர்க்க வேண்டும். தமிழ் எண்களை அனைவரும் அறிந்து கொண்டால், தமிழில் எண்கள் வேண்டாம், ஆங்கிலத்தில்தான் வேண்டும் என்று யாரும் குரல் எழுப்ப மாட்டார்கள். பாடத் திட்டத்தில் தமிழ் எண்கள் சேர்க்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்காக தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.

நன்றி.........
தமிழ்வாசி...

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF