எடுத்த முயற்சிகளிலெல்லாம் தோல்வி.. எங்குப் பார்த்தாலும் துரதிருஷ்டத்தின் ஆதிக்கம்.. ஒரு அடி எடுத்து வைத்தால் பத்தடி பின்நோக்கித் தள்ளிவிடுகிறது உலகு. எனக்கும் மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது..நான் மட்டுமே இந்த உலகில் அதிர்ஷ்டம் இல்லாதவன். இப்படி மனிதன் வாழ்க்கையில் விரக்தியடைந்து, இனி எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் வாழ்ந்தென்ன லாபம்? என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாலே அவன் அடுத்து எடுக்கப் போகும் முடிவு தற்கொலையாகத்தான் இருக்கும்.
வாழ்க்கையில் தொட்டதெல்லாம் தோல்வியில் முடிந்தால்... ஒரு மனிதன் எத்தனைநாள்தான் இதுபோன்ற நிகழ்வுகளைச் சந்திக்க முடியும். இறுதியில் இதனால் விளைவது விரக்தி. விரக்தியின் முடிவு அல்லது வெளிப்பாடுதான் இந்த தற்கொலை எண்ணம். இப்படித்தான் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த தோல்விகளனைத்தையும் சேர்த்துவைத்துக்கொண்டு, துக்கம் மிகுதியால் இனி வாழவே தான் அருகதையற்றவன் என்று எண்ணி தற்கொலைக்கும் முயல்கிறார்.
இன்றிரவு என்னுடைய கதையை முடித்துக்கொள்கிறேன் என்று முடிவெடுத்துவிடுகிறார். நடு இரவு..தற்கொலை எண்ணத்துடன் வெளியில் நடக்கிறார். அருகில் அழகான ஏரி. அந்த ஏரியில் குதித்து தன்னுடைய கதையை தானே முடித்துக்கொள்ள எண்ணி விரைகிறார்.. நிசப்தமான சூழ்நிலை.. உடலுக்கு இதமான குளிர்காற்று வீசுகிறது.. இரவில் பனிக்கொட்டுகிறது.. ஏரியின் அருகில் வந்துவிட்டார்.. இனி குதித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான் என்ற திடமனதோடு ஏரியை நெருங்கிவிட்டார்.. இதோ குதிக்கப்போகிறார்.. ஏரி நீரில் அழகான வெண்ணிலா பிரதிபலிக்கிறது. அடர்ந்த இரவு வானில் நட்சத்திங்கள் ஜொலிக்கிறது.
இலேசாக அடித்த காற்றில் தலைகேசம் பரக்கிறது. அருகில் தாயார் இருந்து பாசத்தோடு தலையை கோதிவிடுவது போன்ற உணர்வு. தாயாரை நினைத்ததும் மனது விம்முகிறது. நீரில் கண்ட நிலவே அழகாக இருக்கிறது. அலைந்தாடும் நீரில் அதுவும் அசைவது போன்ற தோற்றத்தை ரசிக்கிறது. நீரில் இருக்கும் தோற்றமே இப்படி என்றால்.. நிஜமான நிலா எப்படி இருக்கும் என்று வானத்தை அன்னார்ந்து பார்க்கிறார்.
முழுநிலவும் ஆகாயத்தில் ஒளிவெள்ளமாய் ஜொலிக்கிறது. நட்சத்திரங்கள் கூடவே கண்கள் சிமிட்டு ஜாலம் செய்கிறது. என்ன அருமையான இயற்கை... இயற்கையின் படைப்பில்தான் எத்தனை அழகு...! இந்த நிலவெங்கே இருக்கிறது.? நாம் இருக்கும் பூமி எங்கே இருக்கிறது..? பூமியைச் சுற்றும் நிலவு... சூரியனைச் சுற்றும் பூமி..இப்படி ஒன்றை ஒன்று சார்ந்தேதானே இயங்கிக்கொண்டிருக்கிறது. இவையெல்லாம் ஒருநாள் இனி எல்லாமே முடிந்துவிட்டது. அவ்வளவுதான் என்று ஒரு நாளேனும் எண்ணியிருந்தால் என்னவாகியிருக்கும்? ஒருநாளேனும் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவைத்திருந்தால் பிரபஞ்சம் எப்படி இருந்திருக்கும்?
இப்படி மனம் சிந்தனை செய்கிறது..
இப்படி சிந்தனைகளை ஓடவிட்டவர்.. திடீரென தான் எதற்கு வந்தோம்.. இப்போது என்ன சிந்தனை செய்துகொண்டிருக்கிறோம் என்று எண்ணினார்.
தற்கொலை எண்ணத்துடன் விரைவாக வந்த அவர், முதலில் இயற்கை ரசித்ததும்,, பிறகு இயற்கையின் செயல்பாடுகளைப் பற்றி சிந்தனை செய்ததையும் நினைத்தார். தற்போது தற்கொலை செய்யும் எண்ணத்தின் வீரியம் குறைந்திருந்தது. அது வேகமற்று செயலிழந்திருப்பதை உணர்ந்தார்..
அமைதியான சூழ்நிலையில் இந்த பிரபஞ்சம் தன்னிடம் ஒரு செய்தியை சொல்வதாக உணர்ந்தார்.
"உன் உயிரை எடுத்துக்கொள்ள எனக்கு மட்டுமே, படைத்த எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. உனக்கோ, உன்னைச் சார்ந்தவருக்கோ அந்த உரிமை இல்லை.. நீ என்னில் ஒரு அங்கம்.. உன்னை தேவை என வைத்திருப்பதும், தேவையில்லையென நீக்கம் செய்வதும் என்னால் மட்டுமே முடியக்கூடிய செயல்.. இப்போது நீ செல்.. உலகில் வெல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. உனக்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரியும். உன்னில் நீ தாழ்வு எண்ணம் கொள்ளாதே. மற்றதை உன் மனமே பார்த்துக்கொள்ளும்" என்று அறிவுறுத்தியதாகப்பட்டது.
உடனே நான் ஏன் சாக வேண்டும்? தற்கொலை செய்ய வேண்டும்? தற்கொலை செய்துகொள்ள, உயிரை மாய்த்துக்கொள்ள எனக்கு எந்த உரிமையும் இல்லையே.. படைத்தது பிரபஞ்சமாகிய நீ, உயிர்த்தது பூமியில்... அப்படி இருக்கையில் என் உயிரை மாய்த்துக்கொள்ள எனக்கென்ன உரிமை இருக்கிறது. என்ற சிந்தனை மேலோங்கியது.
உடனே அந்த இடத்திலிருந்து 'சட்'டென எழுந்துவிட்டார். ஒரு உத்வேகம் தன்னுள் எழும்பியதை அவர் உணர்ந்தார். உடனே விரைந்தார் வீட்டிற்கு..உலகினில் உயர்ந்தார். யார் அவர்.. ?
பக்மினிஸ்டர் ·புல்லர் என்ற மேனாட்டவர் தான். தனது 32 வயதிலேயே இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை தற்கொலை எண்ணத்தோடு சென்றவர் இவர்.. அப்போது தற்கொலை செய்திருந்தால் உலகிற்கு அவர் யாரென்று தெரியாமலேயே போயிருக்கும்.
Buckminsterfuller |
இந்தப் படம் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.
இந்த மேதை செய்த சாதனைகளனைத்தும் இல்லாமலேயே போயிருக்கும் இல்லையா?.
இயற்கையின் மடியில் அவர் இறுதி மூச்சுவிடும்போது எந்நிலையை எட்டியிருந்தார் தெரியுமா?
1. கணித மேதை(Mathematical Genius),
2. பொறியாளர்(Engineer)
3. கவிஞர்(Poet)
4. கட்டிடக்கலை நிபுணர்(Architect)
என பலதுறையில் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து சாதனைகளைப் படைத்தவர். கிட்டதட்ட நூற்றிஎழுபது கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் என்ற மிகப் பெரிய நிலையை, சாதனையை எட்டியிருந்தார். ஒரு வேளை அவர் தனது 32 வயதில் தற்கொலை செய்திருப்பாரேயானால் மேற்கண்ட சாதனைகளும் சாத்தியமில்லை. இந்தக் கட்டுரைக்கு அவர் உதாரணமாகவும் வந்திருக்க முடியாது.
எனவே நண்பர்களே.. வாழ்க்கையில் மனிதப் பிறவி எடுத்த அனைவருக்கும் ஏதாவது ஒருவிதத்தில் துன்பம், துயரம் இவை போன்றவைகள் வரவே செய்யும். இது இயற்கை. இயற்கையில் மேடுபள்ளங்கள் இருப்பதுபோல...மனிதனுக்கும் இன்ப துன்பங்கள் இரண்டுமே மாறி மாறி வருவது இயற்கை.
இவற்றிலிருந்து எப்படி புத்திசாலித்தனமாக, சமயோசிதத்துடன், துக்கத்தை உள்வாங்காமல், இயற்கையாக, இயல்பாக நமது மனத்தை மாற்றி, அந்த துன்பத்தையே ஒரு அனுபவப் பாடமாகக்கொண்டு மீண்டும் வெற்றிப்பெற எண்ண செய்ய வேண்டும் என்று சிந்தித்து, புத்துணர்வு பெற்று, புரட்சிகரமாக செயல்களை செய்து, வெற்றிப் பாதையை நோக்கி செல்ல வேண்டும். இப்படி யார் செய்கிறானோ.. அவனே மனிதன்.. அவனே வெற்றியாளன்.. அவனே இந்த பிரபஞ்சத்தின் உண்மையான உயிர்நாடி..
நன்றி நண்பர்களே.. மீண்டும் ஒரு அற்புதமான தன்னம்பிக்கை பதிவின் வழி சந்திப்போம்..!
நன்றி.....தங்கம்பழனி
|
No comments:
Post a Comment