welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Monday, 9 July 2012

கண்ணதாசனின் வைரவரிகள்!




கண்ணதாசன் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது
அவரது கவிதைகள் தான். ஈடியணையற்ற ஆயிரக்கணக்கான பாடல்களைத் தந்தவர் அவர். ஆனால் அவரது கவிதைகளைப் போல அவரது மற்ற எழுத்துக்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவையே. அவரது உரைநடைகளில் இருந்து எடுக்கப்பட்ட சில வைரவரிகளை இங்கே தொகுத்து தந்துள்ளேன். அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை நறுக்குத் தெறித்தாற் போல அவர் சொல்லும் கருத்துக்களை நீங்களும் ரசியுங்களேன்!





  • கல்லிலே நார் உரிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஏன் முடியாது? ‘அரசியல்’ என்பது என்னவாம்?

  • அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

  • ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவு தான்.

  • நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.

  • தற்புகழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை. விற்பனையாகாத சரக்கிற்குச் செய்யப்படும் விளம்பரமே!

  • அதிகமான ஆரவாரம் செய்யும் அரசியல்வாதியே ஜனங்களின் முட்டாள்தனத்தைச் சரியாக எடை போட்டவன்.

  • சாப்பிடும் போது உங்கள் இஷ்டத்துக்குச் சாப்பிடுகிறீர்கள். ஆனால் வாந்தியோ அதனிஷ்டத்திற்கு வருகிறது. காரியத்தை உங்கள் விருப்பப்படி செய்கிறீர்கள், எதிரொலி இறைவன் விருப்பப்படி வருகிறது.

  • வீட்டுக்கொரு நாயை வளர்த்தும் மனிதன் விசுவாசத்தைக் கற்றுக் கொள்ளவில்லையே! இனி நாய்கள் மனிதனை வளர்த்து, அதைக் கற்றுக் கொடுக்குமா?

  • மலரைப் பார்; கொடியைப் பார்; வேர் எப்படி இருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதைப் பார்க்க முயன்றால், நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.

  • ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முட்டாள்கள் கையிலே விட்டு விட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவனைக் குறை சொல்வது தான் ஜனநாயகம்.

  • கடவுள் மனிதனை பூமிக்கனுப்பும் போது ஒன்றே ஒன்று தான் சொல்லி அனுப்பினார். “நீ திரும்பவும் மனிதனாக வராதே, தெய்வமாக வா” என்பதே அது.

  • வாலிப வயதில் முட்டாளாக இருந்ததாக நான் இப்போது நினைக்கிறேன். ஆனால் நடுத்தர வயதில் முட்டாளாக ஆவோம் என்று நான் அப்போது நினைத்ததில்லை.

  • அறுந்து போன பட்டம் எங்கே போய் விழும் என்பதும், ஆத்திரக்காரன் கதை எதிலே முடியுமென்பதும் ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

  • நாலு நாள் வளர்த்த கோழிக்குக் கூடத் தான் வாழும் வீடு எது என்பது தெரிகிறது. நாட்டுச் சொத்தை நாற்பது வருஷம் சாப்பிட்ட மனிதனுக்குத் தேச பக்தி இல்லையே!

  • ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு முடிந்து விடுகிறது.

  • இன்ன விஷயத்தைத் தான் ரசிப்பேன் என்று பிடிவாதம் செய்யும் ரசிகனுக்காக நான் எதையும் எழுத முடியாது. அப்படி எழுதினால் இன்னும் நாலு பக்கங்களுக்கு மேட்டர் வேண்டுமென்று கையைக் கட்டிக் கொண்டு நிற்கிற கம்பாஸிடருக்காக எழுதியது மாதிரி தான் இருக்கும்.

  • தெய்வ பக்தியுள்ளவன் வாழ்க்கையில் அஞ்சுகிறான்; ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. நாத்திகன் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான்.

  • ஒரு விஷயத்தில் பிறரது அங்கீகரத்தை நீ எதிர்பார்த்தால், அது நீ முழு அறிவோடு சிந்தித்த விஷயமல்ல என்று பொருள்.

  • உங்களுக்குச் சோறு போடுவேன்’ என்று சொல்வதன் மூலமே, உங்கள் பசியைத் தீர்க்கக்கூடிய சக்தி அரசியல்வாதி ஒருவனுக்குத் தான் உண்டு.
- கண்ணதாசன்

நன்றி.......
-என்.கணேசன்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF