வணக்கம் நண்பர்களே!!
நன்றி................... http://enganeshan.blogspot.com/2011/12/blog-post_23.html
”உடல் உள்ள வரை கடல் கொள்ளாக் கவலைகள்” என்றும், “மனம் அனைத்து துன்பங்களிற்கும் உற்பத்திக்கூடம்” என்றும் சொல்வார்கள். அதிலும் வாழ்க்கை இளமையிலிருந்து விலகி முதுமையை நோக்கிச் செல்லச் செல்ல உடலும் மனமும் ஏற்படுத்துகின்ற பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரும்பாலோருடைய கருத்தும், அனுபவமும் இப்படி இருக்கையில் அதற்கு எதிர்மாறான ஒரு கருத்தை Ageless Body and Timeless Mind (வயதில்லா உடலும் காலமில்லா மனமும்) என்ற தன் நூலில் ஆதாரபூர்வமாய், அழுத்தம் திருத்தமாய் சொல்கிறார்
தீபக் சோப்ரா.
தீபக் சோப்ரா.
இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் குடியேறிய தீபக் சோப்ரா மருத்துவப் படிப்பில் M.D பட்டம் பெற்றவர். உடல்-உள்ளம் சம்பந்தப்பட்ட பல ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டியவர். அவர் எழுதிய சுமார் 65 புத்தகங்களில் 19 புத்தகங்கள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அதிக விற்பனையான மற்றும் பிரபலமான புத்தகங்கள் பட்டியலில் இடம் பிடித்தவை. அதிலும் ’வயதில்லா உடலும், காலமில்லா மனமும்’ என்ற இந்தப் புத்தகம் அந்தப் பட்டியலில் தொடர்ந்து பல வாரங்கள் தங்கிய புத்தகம். இதில் அவர் அலசி இருக்கும் விஷயங்களும், சொல்லியிருக்கும் உண்மைகளும் மிக மிக சுவாரசியமானவை மட்டுமல்ல மிகவும் உபயோகமானதும் கூட. அவற்றைப் பார்ப்போம்...
உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையே உள்ள தொடர்பு நெருக்கமானது என்பதை விட இரண்டும் பின்னிப் பிணைந்தவை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். நம் உடலில் உள்ள செல்கள் நம் எண்ணங்களால் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பவை என்கிறார் சோப்ரா. செல்களின் செயல்பாடுகள் துரிதப்படுவதும், வேகம் குறைவதும், அப்படியே நின்று போவதும், ஏன் தலைகீழாய் பின்னுக்குச் செல்வதும் கூட மனதின் எண்ணங்களைப் பொறுத்து சாத்தியமாகின்றன என்கிறார் அவர்.
செல்களின் சுமார் 90% சக்தி உடலை ரிப்பேர் செய்வதிலும், உடலுக்குத் தேவையான பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்துவதிலும், சீரமைப்பதிலும் செலவாகிறது. ஆனால் மனம் எதைப் பற்றியாவது கவலை கொண்டாலோ, பயம் கொண்டாலோ, ஏதோ ஆபத்தை உணர்ந்தாலோ செல்கள் அந்த வேலை செய்வதை விட்டு விட்டு மனம் சொல்லும் விஷயங்களில் தங்கள் சக்தியை செலவழிக்கின்றன. இது எப்போதாவது ஒரு முறை நடந்தால் பெரிய பாதகம் இல்லை. ஆனால் இது எப்போதுமே நடந்து கொண்டிருந்தால் உடல் பாதுகாப்பும் சீரமைப்பும் கைவிடப்பட்டு மனதின் கற்பனை அவசரங்களில் செல்களின் சக்தி வீணாகிறது. அதனால் அப்படிப்பட்டவர்களின் உடல்கள் சீக்கிரமாகவே முதுமையடைகின்றன, சீக்கிரமாகவே நோய்வாய்ப்படுகின்றன என்கிறார் சோப்ரா. கான்சர், பக்கவாதம் போன்ற நோய்கள் அதிகமாக துக்க காலத்தில் தான் உடலைத் தாக்குவதில் வெற்றியடைகின்றன என்று ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி அவர் கூறுகிறார்.
நமது உடற்கூறின் அடிப்படையான DNA மாறுவதில்லை என்ற போதிலும் அதன் நகலானதும், வேலையாளுமான RNA நமது எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளிற்கும் ஏற்ப தூண்டப்பட்டு அடிக்கடி தன் வேலையை மாற்றிக் கொண்டேயிருக்கிறது. அதனால் உடல் கட்டமைப்பையும் அதன் சக்தியையும் நிர்ணயிக்கும் சக்தியையும் பெற்றுள்ள RNA நமது தவறான எண்ணப்போக்கால் ஒழுங்காக வேலை செய்வதில்லை. சீக்கிரமே சக்தி இழக்கும் உடல் நோயால் விரைவாகவே பாதிக்கப்படுகிறது என்கிறார் அவர்.
இதற்கு பல ஆதாரங்களுடன் கூடிய விரிவான விளக்கத்தையும் தருகிறார் தீபக் சோப்ரா.
முதுமை தவிர்க்க முடியாதது என்ற கூற்றை அவர் முழுமையாக ஒத்துக் கொள்ள மறுக்கிறார். உலகில் ஒரு செல் அமீபா, அல்கே, ப்ரோடோசோவா போன்ற சில உயிரினங்கள் முதுமை அடைவதில்லை என்கிறார். நம் அறிவுத் திறன், உணர்வுகள், தனித்தன்மைகள் முதுமையடைவதில்லை என்கிற அவர் நமது DNAவின் பெரும்பகுதி கூட வயதிற்கேற்ப மாறுவதில்லை என்கிறார்.
தேனீக்களின் வாழ்க்கையை விஞ்ஞானிகள் மிக நுணுக்கமாக ஆராய்ந்து கண்ட அதிசயங்களை விவரித்து தன் வாதத்திற்கு வலுவூட்டுகிறார் அவர். தேன்கூட்டிற்குள் தங்கி முட்டைகளைப் பாதுகாப்பதும், அப்போது தான் பிறந்த புதிய தேனீக்களின் உணவுத் தேவைகளைக் கவனிப்பதும் இளம் தேனீக்களின் வேலை. மூன்று வாரங்கள் வளர்ந்த பிறகு தேன் சேகரிக்க வெளியே சென்று விடும் மூத்த தேனீக்களாக அவை மாறி விடும். இது தான் அவற்றின் இயற்கையான செயல்பாடு. ஆனால் அவசர காலங்களில் அவற்றின் வயதும் வேலையும் ஹார்மோன்களின் உதவியுடன் விரைவுபடுத்தப்படுவதையும், தலைகீழாய் திரும்புவதையும் கண்டு விஞ்ஞானிகள் அசந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு கூட்டுக்குள் தேவைக்கும் அதிகமான தேனீக்கள் இருந்து வெளியே சென்று தேன் சேகரிக்கும் தேனீக்கள் குறைந்தால் கூட்டில் உள்ள இளம் தேனீக்களின் வயது தானாக ஹார்மோன்கள் இயக்கத்தால் மூன்று வாரமாகக் கூடி தேன் சேகரிக்கக் கிளம்பி விடுகின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அதே போல் கூட்டிற்குள் வேலை செய்யும் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வெளியே செல்லும் முதிய தேனீக்கள் எண்ணைக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தேவையான அளவு முதிய தேனீக்கள் தங்கள் ஹார்மோன்கள் வேலைப்பாட்டால் இளமையாகி கூட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுகின்றனவாம்.
தேனீக்கள் மாறும் அளவிற்கு மனிதன் மாற முடியா விட்டாலும் மனித உடலிலும் மூளை தேவைக்குத் தகுந்தபடி பல அற்புதங்களைச் செய்வதை உதாரணமாக தீபக் சோப்ரா சுட்டிக் காட்டுகிறார். மூளையின் வழித்தடங்கள் முதிய வயதிலும் நீள்வதையும், சில நியூரான்கள் சுருங்கும் போது குறுக்குத் தடங்கள் உருவாகி செயல்பாடுகளில் குறைவில்லாமல் மூளை இயல்பாகவே பார்த்துக் கொள்ள முயல்வதையும் விவரிக்கிறார்.
ஆனால் உடல் தன் வேலையை இயல்பாகச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். அதற்கு இடையூறுகளையும் தடைகளையும் நாமாக நம் தவறான வாழ்க்கை முறையாலும், பழக்க வழக்கங்களாலும் ஏற்படுத்தி விடக் கூடாது என்று அவர் அறிவுறுத்துகிறார். அதற்கு பொருள் பொதிந்த அறிவுரைகள் சிலவற்றை மிக விரிவாக இந்த புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். அவற்றில் முக்கியமானவை சிலவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.
நாம் உடலைப் பொருத்த வரை எந்திரமாக இயங்கப் பழகி விட்டோம். இயற்கையாக நடக்கும் உடலின் செயல்களுக்கு நாம் கவனம் தருவதில்லை. அது ஏதாவது வேலையைச் சரிவர செய்யாமல் போனால் அது மட்டும் தான் கவனத்திற்கு வருகிறது. அந்த சமயத்தில் அது பெரும்பாலும் மருந்தில்லாமல் குணமாகாத நிலைக்கு சென்று விட்டிருக்கும். உடலின் ஒவ்வொரு பகுதியையும், அது செய்யும் வேலையையும் விழிப்புணர்வோடு நம்மை அவ்வப்போது கவனிக்கச் சொல்கிறார். அனிச்சையாக நடக்கும் செயலுக்கு நம் கவனத்தையும் தருவது அப்பகுதியையும், அதன் செயலையும் சீராக்கும் என்று அவர் சொல்கிறார்.
பயன்படுத்தாத எதுவும் பலமிழந்து போகும் என்பது உடலியலிலும், மனவியலிலும் நிரூபிக்கப்பட்ட உண்மை. உடலுறுப்பும் சரி, நம் திறமைகளும் சரி பயன்படுத்தத் தவறும் போது பலமிழந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் பயன்படுத்த முடியாததாகவே மாறி விடுகிறது. ஒவ்வொரு தகவலையும் உடல் அவ்வப்போது நமக்கு நுணுக்கமாகத் தெரிவிக்கிறது. ஆனால் எந்திரத்தனமாக செயல்படும் நாம் மற்ற எத்தனையோ விஷயங்களில் மும்முரமாக இருந்து அது சொல்லும் செய்திகளைக் கேட்கத் தவறி விடுவதால் தான் நோய்வாய்ப்படுகிறோம் என்கிறார் அவர்.
வாழும் விதத்திலும் சிந்திக்கும் விதத்திலும் நாம் செய்யும் சின்ன திருத்தமும் நம்மை மிகப் பெரிய விதத்தில் மாற்றும் வலிமை கொண்டது என்கிறார். ஒரு சிஷ்யன் குருவிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான். ”நாம் இருவரும் ஒரே மாதிரி தானே இந்த உலகில் வாழ்கிறோம். பின் எது நம் இருவரையும் வித்தியாசப்படுத்துகிறது?”
குரு சொன்னார். “நீ இந்த உலகில் உன்னைப் பார்க்கிறாய். நான் என்னில் இந்த உலகத்தைப் பார்க்கிறேன்”
சின்னதாய் பார்க்கும் விதம் மாறினாலும் உலகமும், வாழ்க்கையும் மிகப்பெரிய அளவில் மாறி விடுகிறது. வெளியுலகில் நடக்கும் சம்பவங்களுக்கு உண்மையில் நம்மை மாற்றும் சக்தி இல்லை என்கிறார் அவர். அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை வைத்தே நம் வாழ்க்கை அமைகிறது என்று சொல்கிறார்.
உடல் மீது இவ்வளவு ஆதிக்கம் செய்ய முடிந்த மனதைக் கட்டுப்படுத்துவதில் இக்கால மனிதர்கள் வெற்றி பெறாததே அவர்களது மன உளைச்சலுக்கும், துன்பங்களுக்கும் காரணம் என்று அவர் கூறுகிறார். வாழ்க்கை முறையில் எளிமை இல்லாததும், பொய்யான தேவைகளை உருவாக்கிக் கொண்டு அதை நிறைவேற்ற போராட்ட வாழ்க்கையை நடத்துவதும், இயற்கையிலிருந்து விலகிக் கொண்டே செல்வதும், அவசர ஓட்டமும் இக்கால மனிதர்களின் நிம்மதியின்மைக்கு முக்கிய காரணங்களாக அவர் சொல்கிறார்.
ஒரு செயலில் முழுமையாக ஈடுபடும் போது நம்மைப் பொறுத்த வரை காலம் நின்று போகிறது, அல்லது மறக்கப்படுகிறது. அதில் நாம் களைப்படைவதும் இல்லை. ஆனால் இன்று பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்திலும் களைத்தல்லவா போகிறார்கள். இதையும் மிக அழகாகத் தன் நூலில் கையாண்டிருக்கும் தீபக் சோப்ரா எல்லாவற்றையும் மாற்றி உடலிலும், உள்ளத்திலும் புத்துணர்ச்சியையும், சிறந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இந்தப் புத்தகத்தில் சில தியான முறைகளையும், புரட்சிகரமான சிந்தனைகளையும், பயிற்சிகளையும் விளக்கி இருக்கிறார். எல்லாமே அறிவுபூர்வமாகவும், எளிமையாகவும் இருப்பது தான் இந்த நூலின் தனிச்சிறப்பு.
342 பக்கங்கள் கொண்ட இந்த நூல் முழுவதிலும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் விரிவாகவே அலசப்படுகிறது. இரண்டையும் அழகாக இணைத்து தெளிவான முடிவுகளைத் தந்திருப்பதிலும், மாற்றத்திற்கான வழிமுறைகளைக் காட்டி இருப்பதிலும் தீபக் சோப்ரா வெற்றி பெற்றிருக்கிறார். மொத்தத்தில், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இழந்து விட்ட தனிச்சிறப்புகளை மீண்டும் மீட்டெடுக்க இன்றைய மனிதனுக்கு இந்த நூல் வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
நன்றி................... http://enganeshan.blogspot.com/2011/12/blog-post_23.html
|
No comments:
Post a Comment