welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Monday, 12 December 2011

நினைக்கும் விதத்தில் நெருங்கும் இறைவன்

வணக்கம் நண்பர்களே!!

அவதார ரகசியத்தை உணர்வதால் மட்டுமே இறைவனைச் சேரலாம் என்றால் அந்த அளவு சூட்சும அறிவு இல்லா விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி தானாக எழுகிறதல்லவா? அதற்கும் ஞான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.

விருப்பு, பயம், கோபம் இவற்றை விட்டு நானே நினைவாகி, என்னையே அடைக்கலம் என்று நம்பி ஞான அக்னியால் பரிசுத்தமாகி என்னுடன்
ஒன்றாக ஐக்கியமடைந்தவர்கள் பலர்.

பெரும்பாலானோர் இறைவனை நினைப்பதே ஏதோ ஒரு பொருளுக்கோ, செல்வத்திற்கோ, நிலைக்கோ ஆசைப்பட்டுத் தான். அது எதுவும் தேவை இல்லாத போது அடுத்த தேவை உணரப்படும் வரை இறைவன் வசதியாக மனிதர்களால் மறக்கப்பட்டு விடுகிறார். அடுத்ததாக அவர்கள் இறைவனை வழிபட இன்னொரு காரணம் பயம். கும்பிடா விட்டால் ஏதாவது பிரச்னையை உண்டாக்கி விடுவாரோ, தங்களைக் காப்பதை அவர் நிறுத்தி விடுவாரோ என்ற பயமும் சிலருக்கு இருக்கிறது. அதனால் எதற்கு வம்பு என்று வணங்கி இறைவனை திருப்தியாகவே வைத்துக் கொள்ளும் ஜாக்கிரதை உணர்வின் காரணமாகவும் இறைவனை வணங்குகிறார்கள்.

ஆனால் விட்டு விட வேண்டிய மூன்று குணங்களில் முதலிரண்டாக இவற்றையே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். இந்த இரண்டும் உண்மையான இறையுணர்வுக்கு உகந்ததல்ல. தேவையாலும், பயத்தாலும் பூஜிக்கப்பட வேண்டியவனல்ல இறைவன். அடுத்ததாக அவர் சொல்வது கோபம். கோபம் இருக்கும் நேரத்தில் அது ஒன்று தான் பிரதானமாக இருக்கிறது. எல்லா நல்ல தன்மைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன. சொல்லாலும், செயலாலும் தனக்கே தீங்கு இழைத்துக் கொள்ளும் பலவீனமான நிலையில் இருக்கிற மனிதன் மனதில் எந்த நல்ல விஷயமும் புக முடியாது. அப்படி இருக்கையில் இறையுணர்வு எப்படி உள்ளே புக முடியும்?

இந்த மூன்றையும் விலக்கி விடும் போது இறைவனின் நினைவிலேயே தங்கி விடுவது எளிதாகிறது. இறை ஞானம் என்ற அக்னியால் மற்ற அழுக்குகளும் சுட்டெரிக்கப்பட்டு அகம் பரிசுத்தமாகிறது. அகம் பரிசுத்தமாகும் போது மனிதன் தானாக இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான்.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் சுலோகம் மிகவும் பொருள் பொதிந்தது.மனிதர்கள் எவ்வழியில் என்னை நாடினாலும் அதே வழியில் நான் அவர்களிடம் நெருங்குகின்றேன், பார்த்தனே! ஒவ்வொரு விதத்திலும் மனிதர்கள் பின்பற்றும் வழி எனதே ஆகும்.

இறைவனை ஒவ்வொருவரும் காணும் விதங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.
அப்படி காணும் விதங்கள் ஒன்று போலவே இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை. கண்ணனை பாரதியார் தாயாக, தந்தையாக, அரசனாக, சற்குருவாக, இறைவனாக, சேவகனாக, சீடனாக, காதலனாக மற்றும் காதலியாகக் கண்ட கவிதைகள் மிகவும் பிரசித்தம். இப்படி ஒருவரே பல விதமாய் இறைவனைக் காண்பது அபூர்வம். பலரும் இறைவனை ஏதாவது ஒரு வழியில் காண்கிறார்கள், வழிபடுகிறார்கள். இந்த வழிகளில் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று இறைவன் பார்ப்பதில்லை. ஏனென்றால் எல்லாமே தன் வழிகள் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அப்படி அவரவர் நாடிய வழியிலேயே அந்தந்த மனிதர்களை நெருங்குவதாக அவர் கூறுகிறார்.

இதே கருத்து தான் திருவாய்மொழியிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவரென அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் வழிவழி அடைய நின்றாரே.

இறைவன் அவரவர் தன்மைக்கேற்ப நெருங்குவதை இன்னொரு உதாரணம் மூலமாகவும் விளக்கலாம். இறைவன் மின்சாரத்தைப் போன்றவர். மின்சாரம் ஒன்றே ஆனாலும் அது பாயும் மின் கருவிகளுக்கேற்ப விதவிதமான பலனைத் தருகிறது. மின்சாரம் விளக்குகளில் பாயும் போது ஒளியாகிறது, வானொலியில் ஒலியாகிறது, தொலைக்காட்சியில் ஒலியும், ஒளியும் ஆகிறது, சூடேற்றும் கருவியில் உஷ்ணமாகிறது, குளிர்சாதனக் கருவியில் குளிர்ச்சியாகிறது. இப்படி கருவிகளின் தன்மைக்கேற்ப, ஊடுருவும் மின்சாரம் பலனளிப்பது போல இறைவனும் அவரவர் தன்மைக்கேற்ப மனிதர்களை அனுக்கிரகிக்கிறார்.

இறைவனின் நோக்கு விசாலமானது. குறுகிய எண்ணங்களும், கோட்பாடுகளும் அவருடைய அகராதியில் கிடையாது. இதை ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் உணர்வதில்லை. அவர்களுடைய வழிபாடுகள் குறித்த சிந்தனைகள் திட்டவட்டமானவை. ஏதாவது ஒரு ஆன்மிக நூலை மேற்கோள் காட்டி அப்படித்தான் இறைவனைக் காண வேண்டும், வணங்க வேண்டும், வழிபாட்டு முறை இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த வழி  தான் சிறந்தது, மற்றவை எல்லாமே தாழ்ந்தது என்று மிக கெட்டியாக வழிமுறைகளைப் பிடித்துக் கொள்ளும் இவர்கள் இறைவனைத் தவற விட்டு விடுகிறார்கள்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும், வேடுவனான கண்ணப்ப நாயனாரும் இறைவைனை வழிபட்ட முறைகள் சாஸ்திரங்களால் ஒத்துக் கொள்ளப்பட்டவை அல்லவே. ஆண்டாள் இறைவனுடன் கலந்ததாகவும், கண்ணப்ப நாயனாரிடம் இறைவனே "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க" என்று சொன்னதாகவும் படிக்கிறோமே. இவர்கள் வழிபட்ட முறைகளை இறைவன் ஏற்றுக் கொண்டதையும், ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் சொன்னதையும் பார்க்கையில் இறைவனை நாங்கள் அணுகும் முறை தான் சிறந்தது என்று யாரும் சொல்வதில் உண்மையில்லை என்ற முடிவுக்கேஅல்லவா நாம் வரவேண்டி இருக்கிறது.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். “மனிதர்கள் செயல்களுக்குப் பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற ஆசையுடன் வழிபடுகிறார்கள். ஏனென்றால் இந்த மனித உலகில் செயல்களால் வெகு விரைவில் பலன் கிடைக்கிறது.

முன்பே சொன்னது போல வழிபாடு என்றாலே இறைவனிடம் யாசித்தல் என்பது தான் பொதுவாக இருக்கிறது. அதைக் கொடு, இதைக் கொடு என்று பட்டியல் வைத்துக் கொண்டு தான் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். இறைவன் கொடுப்பாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் வந்தால் பேரம் பேசும் வேலையும் நடக்கிறது. நீ எனக்கு இதைச் செய்தால் நான் உனக்கு அதைச் செய்கிறேன்’ என்று பேரம் பேசுகிறார்கள். இறைவனுக்கு இவர்களிடமும் வேலையாக வேண்டியிருப்பது போன்ற பாவனையில் இறைவனை அணுகுகிறார்கள். இதில் மேல்மட்டம், கீழ்மட்டம் என்றெதுவும் இல்லை. எல்லா மட்டங்களிலும் யாசிக்கும் வேலை தான் நடக்கிறது.

ஒரு சக்கரவர்த்தியிடம் ஒரு பிச்சைக்காரன் நிதி கேட்டுப் போனான். பிச்சைக் காரன் போன போது சக்கரவர்த்தி பிரார்த்தனையில் இருந்தார். அந்த நாட்டை நான் வெல்ல அருள் புரி, இந்த நாட்டை வெல்ல அருள் புரி, அந்த செல்வத்தைக் கொடு, இந்த செல்வத்தைக் கொடு...” என்று இடைவிடாமல் கோரிக்கைகளைச் சக்கரவர்த்தி சத்தமாக வைத்துக் கொண்டிருந்தார்.

பொறுத்து பொறுத்துப் பார்த்த பிச்சைக்காரன் கிளம்பி விட்டான். நானே தேவலை போல இருக்கிறது. என்னை விடப் பெரிய பிச்சைக்காரனாய் இந்த சக்கரவர்த்தி இருக்கிறார். என்னை விடப் பெரிய பட்டியல் வைத்து பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு பிச்சைக்காரன் தன்னை விட மோசமாக தேவைகளில் இருக்கும் பிச்சைக்காரனிடம் பிச்சை எடுப்பது நியாயமல்ல

ஒரு விதத்தில் அவன் நினைத்தது உண்மையே. இரண்டுமே பிச்சை தான். பிச்சைக்காரன் உணவையும், காசுகளையும் பிச்சை கேட்டால், அரசர் நாடுகளையும், பல செல்வங்களையும் பிச்சை கேட்கிறார். பிச்சைக்காரனின் பிச்சைத்தட்டு சிறியது, சக்கரவர்த்தியின் பிச்சைப்பாத்திரமோ பெரியது.
இப்படித் தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது என்பது யாசகம் கேட்பதாய் இருக்கிறது. தேவைகளைப் பொருத்த வரை அரசன் முதல் ஆண்டி வரை சரி சமமாகவே இருக்கிறார்கள்.

ஆனால் இதைக்கூட ஸ்ரீகிருஷ்ணர் இழிவாகச் சொல்லாமல் ஒரு தகவலைச் சொல்கிறாற் போலவே சொல்வது கவனிக்கத் தக்கது. பலனை எதிர்பாராமல் செயலைச் செய்யச் சொன்னவர், தன்னை அடையும் வழியில் கூட விருப்பைக் களையச் சொன்னவர், பெரும்பாலானோர் பலனைக் கருதி வழிபடும் விதத்தைக் குறைபாடாகச் சொல்லாமல் அப்படி லௌகீக எதிர்பார்ப்பில் செய்யும் வழிபாட்டுச் செயல்களுக்கு விரைவில் பலன் கிடைப்பதாகச் சொல்கிறார்.

ஏன் லௌகீக செயல்களில் விரைவில் பலன் கிடைக்கிறது தெரியுமா? கேட்டதில் பெரும்பாலானவற்றை இறைவன் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அப்போதும் போதாமல், மேலும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு நிற்கிற மனிதனுக்கு அப்போதாவது புத்தி வருகிறதா என்று பார்க்கிறார். அப்படித் தரவில்லையென்றால் இது மட்டும் கிடைத்திருந்தால் நான் மிகவும் திருப்தியுடன் இருந்திருப்பேன் என்கிற பொய்யான அபிப்பிராயத்திலேயே மனிதன் வாழ்ந்திருப்பான். ஆசைகளை எத்தனை தான் நிறைவேற்றினாலும் புதிது புதிதாக வேறு வேறு ஆசைகள் கிளம்புவதை உணர்ந்து, முடிவில்லாத இந்த ஆசைகள் காட்டும் ஆசையில் மனிதன் சலிப்படைந்து, ஒரேயடியாய் இதை விட்டொழித்து கடைத்தேறத்தான் விரைவில் பலன் தருகிறார்.

இது மனிதன் அனுபவித்து, அறிந்து தெளிய வேண்டிய சமாச்சாரம். தானாகத் தெளிவடைந்தால் ஒழிய இதை விட்டொழிக்க முடியாது. இது கடக்க வேண்டிய பாதையே ஒழிய, ஒதுக்கக் கூடிய பாதை அல்ல. கடற்கரையில் கிடக்கும் கிளிஞ்சல்களைப் பொக்கிஷம் போல சேர்த்து வைத்துக் கொள்ளும் குழந்தைகளைப் பார்த்து “இதெல்லாம் மதிப்புடையவை அல்ல, சும்மா குப்பைகளைச் சேர்க்காதீர்கள்” என்று பெற்றோர் சொன்னால் குழந்தைகள் கேட்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியாமல் வீட்டில் இருந்து எடுத்து வீசிப்பாருங்கள். ஆத்திரமடைந்து அழுது தீர்ப்பார்கள். ஆனால் வளர்ந்து விட்ட பிறகு அதைத் தானாகவே வெளியே வீசி விடுவார்கள். கிளிஞ்சல்கள் விஷயத்தில் குழந்தைகள் வளர்ந்து விடுபடுகிறார்கள். ஆனால் ஆசைகள் விஷயத்தில் மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் வளர்ந்து பக்குவம் பெற்று விடுபடுவதில்லை. அதுவே பொதுவான உலக இயல்பாக இருக்கிறது.

மேலும் பிரார்த்தித்துப் பெறும் பொருள்களை மனிதனால் அளக்க முடிகிறது. அதனால் சீக்கிரம் கிடைத்ததாக மனிதன் உணர்கிறான். ஆனால் பொருளல்லாத மற்ற உயர்ந்த உணர்வுகளையும் அனுபவங்களையும் மனிதனால் அளக்க முடிவதில்லை. அதனால் அவற்றைப் பிரார்த்தித்துக் கேட்பவர்களும், கிடைத்தால் உண்மையாக உணர்பவர்களும் வெகு சொற்பமே...

நன்றி...............
.http://enganeshan.blogspot.com/2011/12/blog-post_23.html

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF